சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 12 முதல் மார்ச் 15 வரை நடைபெறும் என தேதி நிர்ணயித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று (மார்.12) விசாரணைக்கு பட்டியலிட்பபட்டிருந்த நிலையில், திடீரென இந்த வழக்கை ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து, வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்; சபாநாயகர் சூசகம்!