திருச்சி:கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தோடு, திருச்சி மாநகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மிக விழா, திருச்சி திருவானைக்காவல் விபூதி பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவில் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பது குறித்த தலைப்பில் ஓய்வுபெற்ற காவல்துறை முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அறநிலையத்துறை நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். பறிபோன சிலைகளை மீட்காமல் சப்பைகட்டு கட்டுவதுபோல ஆறாயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தோம் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழகத்தில் தனது நிர்வாகத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி, தற்போது தொல்லியல் துறையில் உள்ள உதயச்சந்திரன் தற்போதும் தனது திறமையைக் காட்ட வேண்டும். அந்த காலத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வழிபாட்டுக்காகவே உற்சவர் வீதி உலா நடைபெற்றது. அந்த விக்கிரகங்கள் அனைத்தும் முகலாயர்கள் படையெடுப்பின் போது பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
லண்டனில் இருக்கும் விக்ரகங்கள்:லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தெய்வ விக்கிரகங்கள் வைக்கப்பட்டு உள்ளது.1,414 விக்கிரகங்கள் சுபாஷ் கபூரால் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட கட்சியினரை குறிப்பிடுவதால் நான் ஒரு கட்சிக்கு மட்டும் சார்ந்தவன் அல்ல.
3 லட்சத்தது 50 ஆயிரம் தெய்வ விக்கிரகங்களை பதிவு செய்யுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதற்கு எல்லாம் நீதிமன்றம் மட்டும்தான் தீர்வா, அப்படி என்றால் அரசு எதற்கு?. மியூசியத்தில் உள்ள சுவாமி விக்கிரகங்களை கோயிலில் வைக்கவேண்டும். தெய்வ விக்கிரகங்களை காட்சிப்பொருளாக வைத்து அறநிலையத்துறை கேவலப்படுத்த வேண்டாம்.