சென்னை : சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னையை 4 முனைகளில் இருந்து இணைப்பதற்கும், சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.
ஒரு கோடியே 26 லட்சமாக இருக்கின்ற மக்கள் தொகை இன்னும் வரும் காலங்களில் ஒரு கோடியே என்பதிலிருந்து 90 லட்சம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். அப்போது சாலை போக்குவரத்து மிகவும் நெரிசல் ஆகிவிடும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது. அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர். சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரை பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான். அவர் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ம் தேதி மாநாடு நடத்தவில்லை. அன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க :ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடைபெற்ற தவெக மாநாடு பூமி பூஜை!
தேசப்பிதாவை தினம், தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார். நான் திருமாவளவன் நாகரீகமான தலைவர் என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த மேடையில் அவர் பேசியதைப் பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது. அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன்.