வெங்கடேசன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக பேட்டி சென்னை:தமிழ்நாடு அரசின் மனித மேலாண்மைத்துறையின் செயலாளர் நந்தகுமார் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அனைத்துத்துறைகளுக்கு அனுப்பிய கடிதத்தில், பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றை அந்தத்தந்த துறைகளே மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, "மனித மேலாண்மைத்துறையால் வெளியிடப்பட்ட கடிதம் மற்றும் அரசாணை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசிடம் தெரிவித்துள்ளோம். இந்த கடிதத்தில் ஊழியர்களின் பணித் தொடர்பான கோப்புகளை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முரணாக பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை, பதவி உயர்வு பணி தொடர்பான கோப்புகளை மனிதவள மேலாண்மைத்துறைக்கு அனுப்பலாம் என உள்ளது. இது குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று முரணாக உள்ளதைத் தெரிவித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளில் ஆலோசனை இல்லாமல் ஒவ்வொருதுறையும் ஒரு மாதிரி முடிவுகள் எடுத்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். மேலும் இதன் மீது நீதிமன்ற வழக்குகள் வந்தால், கடுமையாக விமர்சனங்களை அரசின் மீது வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
துறைகளுக்கான சட்டம் விதிகள் இருந்தாலும், ஆலோசனை குழு தேவை என்பதால் தான் வைத்துள்ளனர். மனிதவள மேலாண்மைத்துறையின் கடிதத்தால், துறைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆலோசனை வழங்கக்கூடிய துறைகளைக் குறைத்தால் அரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
திமுக அரசு பதவிக்கு வந்தப் பிறகு 30 மாதங்கள் கடந்த நிலையில் 100 சதவீதம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை . சொன்னதை எதையும் செய்யவில்லை, சொல்லாததைச் செய்துள்ளனர். சரண்டரை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளனர். காலவரையின்றி என்பது இனிமேல் கிடையாது என்பது தான் அர்த்தம். அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டாக கூறினர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் அரசின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
அரசாணை 115 போடப்பட்டப்போது அதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனைத் தொடரந்து முதலமைச்சர் அழைத்து பேசினார். அரசாணை ரத்து செய்யப்படவில்லை, ஆனால் அந்தக்குழுவின் ஆய்வு வரம்புகள் தான் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றார்.
குருப் டி உள்ள பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது, சமூக நீதியை காப்பாற்றுவதாக கூறும் அரசு அதற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது. குருப் டி பணியிடங்களை நிரப்பும் போது தான் கீழ் தட்டில் உள்ள மக்கள் அந்தப் பணிக்கு பின்னர் மேல் நிலைக்கு வருவார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
அதனை மாற்றி தனியார் வசம் கொடுக்கும் போது, அவர்கள் எந்த வகையிலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற மாட்டார்கள். தனியார் வசம் ஆக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது- அரசின் ஆவணங்களின் படியே 3 லட்சத்து 50ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது.இன்னும் 2 ஆண்டுகளில் எப்படி இவர்கள் நிரப்ப முடியும். எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தோ்வு வாரியம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
மனிதவள மேலாண்மைத்துறைக்கு தனியாக ஒரு செயலாளர் வேண்டும் என கேட்டோம். பணியாளர் நலனைக் காக்கும் துறைக்கு தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போது தான் காலிப்பணியிடங்கள் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரசாங்கம் தனியார் மயத்தை நாேக்கி தீவிரமாக சென்றுக் கொண்டு இருக்கிறது. தனியார் மயம் என்பது சமூக நீதிக்கு எதிரானது தான்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:காமராஜர் பல்கலை.யில் செலுத்திய கட்டணத்தை பதிவு செய்யாமல் குளறுபடி; ஷோகாஸ் நோட்டீஸை ரத்து செய்ய கோரி மனு!