ஈரோடு: ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சையத். இவர் பள்ளிப் படிப்பை முடித்து, கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் பகுதியில் வேலை செய்து வந்துள்ள நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவருடைய பெற்றோர் மற்றும் ஒரு உடன் பிறந்த தங்கை ஆந்திராவில் உள்ள நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரால் சொந்த ஊருக்கு திரும்ப இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கண்டு அஞ்சி விரட்டியதால், அங்கிருந்து ஒவ்வொரு பகுதியாக இடம் பெயர்ந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சரளை என்ற பகுதியில் உள்ள போக்குவரத்து நிழற்குடையில் வந்து சையத் வந்து தங்கி உள்ளார்.
யாரிடமும் உணவு கூட கேட்டு வாங்காமல் பொதுமக்களே கொடுக்கும் உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சையதை மீட்ட தனியார் (அட்சயம்) அறக்கட்டளை நிறுவனம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளனர்.