சென்னை:ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று கோவையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளானர்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்," ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார்.
ஆற்றல்மிகு தளகர்த்தராக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:"மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை:"ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது, கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், பிஜேபி தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்:,"மதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி:"அருமை அண்ணன் கணேசமூர்த்தி மறைவு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. போய்வாருங்கள் அண்ணா... உங்கள் அன்பும்,பாசமும் புன்னகையும் என்றென்றும் நிலைத்திருக்கும்" எனபதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"கொங்குச் சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்" - கணேசமூர்த்திக்கு மறைவுக்கு வைகோ இரங்கல்!