சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.8) நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவின்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற்று முடிந்த 10ம் சுற்றில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 69,859 வாக்குகளில் முன்னிலையில் இருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி 15,026 வாக்குகளில் பின் தங்கியுள்ளார்.
இதனால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி நெருங்கி வரும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் இடைத்தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்திரகுமார், '' தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் ஜனநாயகம் இல்லை என்று சொல்வார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது. இந்த தேர்தல் ஜனநாயக முறையில் நேர்மையாக நடக்கும் என்று திமுக அமைச்சர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்த இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை.
இதையும் படிங்க:Live: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை.. பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
இந்த சூழ்நிலையில்தான் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. ஆளுங்கட்சி போட்டியிடும் இடைத்தேர்தலில் எதிர் கட்சி புறக்கணிப்பதெல்லாம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த சமயத்தில் யாராவது போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாங்குவார்கள். அப்படி வாங்குகிற வாக்குகள் விபத்தை போலத்தான். அதுவே வாக்கு வங்கியை வைத்து போட்டியிட்டால் அது போன்ற கட்சிகள் மிக பெரிய பின்னடைவை சந்திக்கும்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு, பிரதான கட்சிகள் போட்டியிடவில்லை.. அதனால் உங்களுக்கு (திமுக) கிடைத்த வாக்குகளும் விபத்துதானா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சந்திரகுமார், ''இப்படி கேள்வி எழுப்பி திசை திருப்ப வேண்டாம்.. பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால் எங்களுக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு போயிருக்கலாம். ஆனால் எங்களுக்கு உள்ள வாக்கு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதே போல எதிர்க்கட்சி வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு போகவில்லை. எதிர்கட்சி வாக்காளர்களும் எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்'' என்றார்.