ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? ஈரோடு:ஈரோடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வருபவர், கணேசமூர்த்தி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அதில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை நேரில் சென்று பார்த்து திரும்பினார். இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவலைக்கிடமாக உள்ளார், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது, பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும்.
சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதால், காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈரோட்டிலேயே வயிறு சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்துள்ளதால் தான் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறியுள்ளார். இதனிடையே, கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக, கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:வருமான வரி தாக்கல் பண்ணப் போறீங்களா? வரி சேமிப்புக்கு 10 அசத்தல் வழிகள்! மறக்காம படிங்க! - Income Tax Saving Ideas