திருநெல்வேலி:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து ரயில் மூலம் நெல்லை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு மூலம் 7.5% இட ஒதுக்கீட்டு முறையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவிகள் ஆறு பேர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர்.
பின்னர் மாணவிகளுக்கு சால்வி அணிவித்து கேடயம் வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் எடப்பாடி பழனிச்சாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் பெற்ற மாணவி சமிதா பர்ஹானா கூறும்போது, "நீட் தேர்வில் 537 மதிப்பெண் பெற்ற எனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் என்னைப் போன்ற அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கிறது.
அதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்க அப்பா ஆட்டோ தான் ஓட்டுகிறார் அவரால் என்னைத் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து டாக்டர் படிக்க வைக்க முடியாது எனவே இந்த 7.5% சதவீத இட ஒதுக்கீட்டால் என்னால் அரசு பள்ளியில் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல் அடுத்தடுத்து ஆண்டும் இந்த திட்டத்தால் பல மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள், இத்திட்டத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி" என தெரிவித்தார்.