தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொண்டர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஈபிஎஸ்... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு! - கும்பகோணம்

Edappadi Palaniswami: அதிமுக திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொண்டர்கள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

AIADMK General Secretary
தொண்டர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 2:53 PM IST

தொண்டர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ள SET திருமண மண்டபத்தில் திருவிடைமருதூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை செல்ல விமானத்திற்கு நேரமாகிவிட்டது எனவும், எனவே அதிக நேரம் பேச முடியாது எனத் தெரிவித்து விட்டு, கட்சி தொண்டர்கள் இல்ல திருமணம் என்பது எங்கள் இல்ல திருமணம் போல் மகிழ்ச்சியாக உள்ளது. மாவட்ட, வட்ட, கிளைக் கழக செயலாளர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த தொண்டர்கள் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க மணமக்கள்” எனக்கூறி இரண்டு நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி திருச்சி புறப்பட்டார்.

முன்னதாக, அதிமுக திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கும்பகோணம் வருகை தந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்குக் கும்பகோணம் மாநகரில் பல்வேறு பகுதிகளிலும், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடி நின்று மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக, கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள அரகாசியம்மாள் தர்கா அருகே ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஜமாத் தலைவர் அயூப்கான் எடப்பாடி கே.பழனிசாமிக்குச் சால்வை அணிவித்து திருக்குர்ஆன் புத்தகத்தைப் பரிசளித்தார்.

அதனை மரியாதையுடன் வாகனத்திலிருந்து இறங்கிப் பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி புன்னகையுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாகத் திருமண மண்டபம் முன்பு முகப்பு பகுதியில் ஏராளமான வாழை மரங்கள், கரும்புகளைக் கொண்டு அலங்கரித்து வைத்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற சில நொடிகளிலேயே இங்கு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களையும், கரும்புகளையும் பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details