கரூர்:கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அவரது தாய் பழனியம்மாள், தந்தை வேலுச்சாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (பிப்.8) காலை 9 மணியளவில் கேரளா பதிவு எண் கொண்ட காரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனைக்காக வந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்புறமாக தாழிட்டுக் கொண்டு, அமைச்சரின் பெற்றோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை சிற்றுண்டி கூட வழங்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக, மதியம் 12.30 மணியளவில் மேலும் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி வந்து சோதனை மேற்கொண்டு வருகிறார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கடந்த 2023 ஜூன் 17ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணி நேர தொடர் சோதனை நடத்தியது.
பின்னர், அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. பின் பல முறை ஜாமீனுக்கு அமைச்சர் முயன்றார். ஆனால், ஜாமீன் வழங்கப்படாமல் நேற்று (பிப்.7) 19வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதனிடையே, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்கக் கூடாது என்றும், விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நெல்லையில் பாஜகவைக் கண்டித்து திமுக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!