சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கடத்தப்பட்ட வழக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே, ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக் மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், ஜாபர் சாதிக் மனைவியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும், ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காதலி கண்முன்னே காதலன் கொடூர கொலை.. நெல்லையில் பகீர் சம்பவம்! - TIRUNELVELI YOUTH MURDER