சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பரபரப்பாக பேசப்பட்டவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இவர் எந்த மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாலும் அங்கு ஒரு அதிரடி ஆபரேஷன் நடக்கும் என்றே காவல்துறை வட்டாரத்தில் பேசப்படும். குறிப்பாக கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற குற்ற சம்பவங்கள் எங்கு அதிகமாக நடக்கிறதோ அந்த பகுதிக்கு வெள்ளத்துரை நியமிக்கப்படுவார்.
வெள்ளத்துரை கடந்த 2004ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும், சென்னை அயோத்திகுப்பத்தில் ரவுடி வீரமணியை என்கவுண்டர் செய்ததில் வெள்ளத்துரை மிகவும் பிரபலமானார். இதேபோல கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரவுடிகளை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரவுடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளத்துரை பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான ஆணையை உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் பழைய வழக்கின் நிலுவை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரையின் சஸ்பெண்டை ரத்து செய்துள்ளதாக தமிழக உள்துறை அலுவலகம் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஓய்வு பெறும் நாளில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை திடீர் சஸ்பெண்ட்.. யார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை? - ADSP VELLADURAI SUSPENDED