சென்னை:அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. மற்ற மலை சார்ந்த பகுதிகளில் 15.06.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து இதுவரை மொத்தமாக 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பொருட்டு மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் காலி பாட்டில்கள் மூன்றாம் நபரிடம் செல்லாமல் இருப்பதற்காகவும், காலி பாட்டில்கள் உடைக்கப்படாமல் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்துடனும் சென்னை உயர்நீதிமன்றம் காலி பாட்டில்களை மதுபான உற்பத்தி நிறுவனங்களே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுறுத்தியது.
அதனடிப்படையில் ஏற்கெனவே கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி பாட்டில்களை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுபான உற்பத்தியாளர்களும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர்.
அக்டோபரில் அமல்: சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.