திருப்பத்தூர்: ஜவ்வாது மலைத்தொடரில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக டஸ்கர் என்னும் ஒற்றைக் கொம்புடைய காட்டுயானை வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், டஸ்கர் யானை நேற்றைய முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் நள்ளிரவில், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடி வந்தது.
பின்னர், இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து, காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் உடையராஜபாளையம், ஜமீன், குளிதிகை, வெங்கிலி, கீழ்முருங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து யானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, யானை நிலப்பகுதியில் புகுந்ததால் இளைஞர்கள், திருப்பத்தூர் மாவட்ட உதவி வன அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர், ஒடுகத்தூர் வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஒன்றிணைந்து யானையை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வைப்பத்தற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று விடியற்காலை யானை கீழ்முருங்கை பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால், அந்த யானை வனப்பகுதியிக்குள் செல்லாமல், கீழ்முருங்கை வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில் முகாமிட்டது.