தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்குசம் இல்லை! பாசம் தான் ஆயுதம்! தமிழ்நாட்டு கும்கிகளின் ஸ்பெஷல் என்ன? - Kumki Elephants

பாசத்தால் வளர்க்கப்படும் தமிழக கும்கி யானைகள், இந்தியா முழுவதும் வலம் வரும் அளவிற்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள் என்ன என்பது குறித்த தகவல்களை இந்தச் செய்தி தொகுப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கும்கி யானைகள் மற்றும் பாகன்கள்
கும்கி யானைகள் மற்றும் பாகன்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 8:01 PM IST

Updated : Oct 1, 2024, 12:39 PM IST

கோயம்புத்தூர்: "யானையின் கால்களை வேண்டுமானால் சங்கிலியால் கட்டலாம், ஆனால் அதன் குணத்தை கட்ட முடியாது. யானை தான் ஒரு காட்டு விலங்கு என்பதை அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தி காண்பித்துக் கொண்டே இருக்கும்" என்கிறார் கும்கிகளின் அரசன் என்று அறியப்படும் கலீம் யானையின் பாகன் மணி.

வனப்பகுதியை ஒட்டிய மனிதர்களின் வசிப்பிடங்களில் மனித மிருக மோதல்களைத் தடுக்க (Man Animal Conflict) கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. யானைகளை பிடிப்பதற்கும், அதனை இட மாற்றம் செய்வதற்காகவும் பிரத்யேகமாக பயிற்சிகளை இந்த கும்கி யானைகள் பெற்றுள்ளன. அந்த வகையில், இந்தியாவிலேயே சிறந்த கும்கிகள் தமிழகத்தில் தான் உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள 29 கும்கி யானைகள், டாப்சிலிப்பில் உள்ள 26 கும்கி யானைகள் என மொத்தம் உள்ள 55 கும்கி யானைகள் தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த யானைகளில் கலீம், வில்சன், சின்னதம்பி யானைகள் தங்கள் தனித்திறனால் மிகவும் பிரபலமானவையாக அறியப்படுகின்றன.

பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

குணங்களை கட்டிப்போட முடியாது: இத்தகைய கும்கி யானைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து யானை பாகன்கள் கூறுகையில், “பொதுவாக மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சனை செய்யும் யானைகளை வனத்திற்குள் மீண்டும் விரட்டவே முயற்சி செய்வோம். ஆனால் முடியாத பட்சத்தில் அதிக பிரச்சனை செய்யும் காட்டு யானைகளை பிடித்து வந்து கும்கியாக மாற்ற முயற்சி செய்வோம்" என்கிறார் மணி.

இவ்வாறு பிடிக்கப்படும் யானைகள் முதலில் கரோல் என்று அழைக்கப்படும் மரக்கூண்டில் அடைக்கப்படும். ஒவ்வொரு நாளும் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வழக்கம் கொண்ட யானைகள் கூண்டில் அடைக்கப்பட்டதும் ஆக்ரோஷமாக மாறும். எப்படியாவது கூண்டை உடைத்து தப்பித்துப் போக முயற்சி செய்யும். ஆக்ரோஷமாக மரக்கூண்டை முட்டி சோர்வாகும்.

இந்த நேரத்தில் உணவும் கட்டுப்பாடாகவே வழங்கப்படும். இதன் பின்னர் தான் யானைகளுக்கு கட்டளைகளை கொடுக்கத் தொடங்குவோம் என்கிறார் மணி. சொல்வதை செய்தால் சாப்பாடு என்ற வகையில் யானைகள் பழக்கப்படுத்தப்படும்.

ஒரு துண்டு கரும்பு: "ஒவ்வொரு முறை நம்ம சொல்றதை கேக்கறப்ப, யானைக்கு ஒரு துண்டு கரும்பு தருவோம். படிப்படியா அந்த ஆக்ரோஷம் குறைஞ்சு சாதுவா மாறி, நம்ம சொல்றதை கேக்க ஆரம்பிச்சுடும். அந்த ஒரு துண்டு கரும்புலதான் எல்லாமே இருக்கு" என்கிறார் மணி.

பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

"மற்ற மாநிலங்களில் அங்குசம் வெச்சு தான் யானைக்கு பயிற்சி குடுப்பாங்க. நாங்க அங்குசத்தை எல்லாம் தொடவே மாட்டோம். கருந்துவரை குச்சிதான் பயன்படுத்துவோம். இது பெருசா வலிக்காது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அங்குசுத்தை வெச்சு யானைகள குத்துவாங்க. அதனால்தான் யானைகள் கோபப்பட்டு பாகன்களை தாக்குகிற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.

ஆனால், தமிழகத்தில் பாகன்கள் நெருங்கி பழகி, அன்பா, பாசமா, அனுசரணையா பேசுவது தான் எங்க பழக்கம். அப்படி பழகினாலே அது நல்லா புரிஞ்சுக்கும். நம்ம குழந்தைங்களை கொஞ்சுவது போல் தான். நாங்கள் சாப்பிடும் போது கூட யானைக்கு கொடுத்து விட்டுதான் சாப்பிடுவோம்" என யானைகளை குழந்தைகள் போல மாற்றும் வழிமுறையை விளக்கினார்.

பாகனிடம் கொஞ்சி விளையாடும் கும்கி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

குறும்புக்கார யானைகள்: தமிழ்நாடு கும்கிகளைப் பொறுத்தவரையிலும் , கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பல ஆபரேஷன்களை வெற்றிகரமாக முடித்துள்ளன. இப்பவும் கேரளா முத்தங்கி யானை முகாம்ல தமிழ்நாட்டின் டாப்ஸ்லிப்பைச் சேர்ந்த பாகன்கள் உள்ளனர். யானைக்கு பயிற்சி குடுக்கறது ஒரு மாதிரியான சவால்கள் இருக்கும். அதுவே ஏற்கனவே பயிற்சி பெற்ற யானைகளுக்கு சில நேரங்களில் பாகன்கள் மாற வேண்டிய சூழல் வரும். அதில் சவால் இன்னும் அதிகம்.

கொஞ்ச நாளுக்கு அந்த யானைக்கு பழக்கமானவங்க கூடயேபோய் பழகுவோம். குறும்பான யானையா இருந்தா அதிக நாட்கள் எடுக்கும். எங்க வாசனைய அதுக்கு நல்லா பழக்கணும். அந்த பாகன் வரதுக்கு முன்னாடி, அதை நல்லா மேய்ச்சலுக்கு கூப்பிட்டு போய் பேச்சு குடுத்துட்டே நம்பிக்கை வர வைக்கணும். அப்பவும் வாய்ப்பு கெடக்கறப்ப நம்மள அடிக்க வரும். சாப்பாடு குடுத்துகிட்டே இருந்து நல்லா கவனிக்கனும். அப்பதான் யானை நம்ம கூட பழகும். அதுவரை நெருங்கவே முடியாது.

இதையும் படிங்க:'40 ஆண்டு கால யானை தந்தம்'.. வறுமைக்காக விற்க முயற்சி.. கோவையில் 5 பேர் கைது!

யானை மொழி: யானை பயிற்சிக்கு தனி பாசை இருக்கு. 'வர்தா' (அருகில் வருவது), 'வரியே' (முன்நோக்கி செல்வது), 'மண்டிசூட்' (இரண்டு கால்களை மடிப்பது), 'பைட்' (படுப்பது), 'ஜமாட்' (காட்டு யானைகள் கயிறுல கட்டிருக்கும்போது, அது ஓடாம இருக்க கும்கிய கயிற மிதிக்க சொல்வது), 'அதி' (கால்களை தூக்குவது), 'திரிகூட் டிரை' (கயிறை தந்தத்தில் சுற்றி வாயில் கடிப்பது).

இந்த மொழிய அதுக்கு புரிய வைக்கறதுதான் பயிற்சியோட அடிப்படை. 20 வயசுக்கு மேல் உள்ள யானைகளா இருந்தா மூணு மாசத்துலயும், சின்ன வயசா இருந்தா ஒரு மாசத்துலயும் பயிற்சி குடுத்துருவோம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 47 மொழிகள் கலந்துருக்கும்.

இதுதவிர யானைங்கள் கிட்ட எங்களோட மலசர், குறும்பர் பழங்குடி பாசையும் பேசுவோம். இதை தமிழ்லயே சொல்லி பழக்கலாம். ஆனா, அப்படி பழக்கினா யார் கூப்பிட்டாலும் போயிடும். அதனாலதான் இந்த மொழிய பயன்படுத்தறோம்.

குழந்தையாக மாறும் யானை: நம்ம யானைகள் மேல எவ்ளோ அன்பா இருக்கமோ, அதே மாதிரி யானைகளும் நம்ம மேல அன்பா இருக்கும். காட்டுக்குள் உணவு எடுக்க செல்லும்போது மற்ற விலங்குகளால் ஏற்படும் ஆபத்தான நேரத்துல யானைகள் நம்மள காப்பாத்தும். நாங்க எங்கயாச்சு வெளியே போயிட்டு வரும்போது வீட்ல குழந்தைகளுக்க தின்பண்டம் வாங்கற மாதிரி, யானைக்கு வாழை, தர்பூசணி வாங்கிவிட்டு வந்து குடுப்போம்.

பாகனிடம் அன்பைப் பொளியும் கும்கி (Credits - ETV Bharat Tamil Nadu)

சமீபத்துல தாய்லாந்துக்கு போனோம். அவங்க யானைகளுக்கு பயிற்சி குடுக்க அங்குசம், ஈட்டி, கத்தி எல்லாம் வெச்சிருக்காங்க. அது ரொம்ப ஆபத்து. கடைசி வரைக்கும் யானைக்கு நம்ம மேல நம்பிக்கையே வராது. இங்க ஒரு குச்சி தான் வெச்சுருப்போம். நம்மளோட ஒவ்வொரு அசைவும் யானைங்களுக்கு தெரியும். அதனால அன்பை பகிரும்போதுதான் நம்பிக்கை வரும். யானைகள் நம்மளை விட அறிவாளி. நம்பிக்கை மட்டும் வர வெச்சுட்டா, அந்த யானை நம்ம சொன்னா எதையும் கேட்கும்" என்று தெரிவித்தார்.

பயிற்சியில் உள்ள கும்கி யானைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 1, 2024, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details