புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, புதுச்சேரியில் 967 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக துணை ராணுவப் படையினர் மற்றும் சிசிடிவி கேமரா, வெயிலில் வாக்குகளை பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்காக பந்தல், தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு மகளிர் கல்லூரி மற்றும் மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. அதற்காக பெல் நிறுவனத்திலிருந்து 600 ஊழியர்கள் புதுச்சேரிக்கு வர வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், "புதுச்சேரியில் உள்ள 967 வாக்கு மையங்களில் வாக்கு இயந்திரங்கள், சின்னம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரி மற்றும் மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் இந்த பணியானது நடைபெற்று வருகிறது.
அதற்காக பெல் நிறுவனத்திலிருந்து 60 ஊழியர்கள் வந்துள்ளனர். அதில் புதுச்சேரியில் 46 நபர்களும், காரைக்காலில் 10 நபர்கள், மாஹி, ஏனாம் தலா 2 நபர்கள் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் வேட்பாளர்கள் முன்னிலையில் பெல் நிறுவன ஊழியர்கள் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்துமே வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2 நாட்கள் நடைபெறும். பணியின்போது, செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.