ஓசூரில் 'நோ வாட்டர்.. நோ வோட்' என வீடுகளில் நோட்டீஸ்கள் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு! கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில், பாகலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கே.சி.சி குடியிருப்பு பகுதியில் முறையாகக் குடிநீர் வழங்காத காரணத்தால் அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் பொருட்டு 'நோ வாட்டர்..நோ வோட்' என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வீடுகளில் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி தனியாருக்குச் சொந்தமான லேஅவுட் பகுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பொழுது, இந்த பகுதி தனியாரிடமிருந்து முறையாக மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல நல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான லேஅவுட் பகுதியிலும், சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழைக்காலங்களில் நீர் வெளியேற்றமானது முறையாகக் கட்டமைக்கப்படாததாலும், கோடைக் காலங்களில் நிலத்தடி நீர் முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்படுவதால், ஆண்டுதோறும் நிலவும் இந்த பிரச்னையை தீர்க்க இதுவரை அரசு முன்வருவதே இல்லை என அப்பகுதிமக்களால் கூறப்படுகிறது.
தற்பொழுது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கடந்த நான்கு மாத காலமாக இந்த பகுதியில் முறையாகக் குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பொழுதும் தொடர்ந்து இந்த பகுதி தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாநகராட்சியின் கீழ் மேம்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பரஸ்பர விவாகரத்து: நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்குச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு! - Dhanush Aishwarya Divorce Case