சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை அடுத்து நாடு முழுவதும் விதிமுறைகள் அடங்கிய தேர்தல் நடத்தைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க பறக்கும் படை பணி அமர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் அகற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துத் தேர்தல் ஆணையம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாத சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் அகற்றப்படாமல் உள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன.
ஆணையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் இருப்பதைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, அனுமதி இல்லாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பான அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். அதேபோல், பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணி நேரத்திலும், தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:100 ரூபாய் அதிகமாக கொண்டு சென்றதால் தேர்தல் அதிகாரிகளிடம் பணத்தை இழந்த சிறுவன்!