சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னையில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் இன்று முதல் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், காவலர்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனி (ஏப். 11, 12, 13) ஆகிய நாட்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம்.
வடசென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள் வண்ணாரப்பேட்டை, பேசின் பாலம் சாலையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்தலாம்.