தென்காசி:தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கையெழுத்து இயக்கங்கள், வாகனப் பேரணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தியும், நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திப்பதை வலியுறுத்தியும் உலக சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள், 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியில் குழு குழுவாக சேர்ந்து பெண்கள் ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முளைப்பாரி உள்ளிட்டவை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பறை இசைகள் முழங்க, செண்டை மேளம் வாசிக்க, பரதநாட்டியம், வில்லிசை உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை ஏந்தியவாறு, தேர்தலை நேர்மையாகச் சந்திக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணியில் பங்கேற்றனர்.