தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடைமைகளுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரிதாபம்..! - MAN DIES AT CHENNAI AIRPOR

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த முதியவர் விமான நிலையத்தில் தவறவிட்ட உடைமைகளை வாங்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏர்போர்ட், ராமானுஜலு பாஸ்போர்ட்
சென்னை ஏர்போர்ட், ராமானுஜலு பாஸ்போர்ட் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 12:42 PM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நாவல்பாக்கத்தை சேர்ந்தவர் ராமானுஜலு (80). இவரது மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமானுஜலு அவரது மகன்களை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று இருந்தார்.

இதையடுத்து அமெரிக்காவில் சில தினம் தங்கி இருந்த ராமானுஜலு நேற்று முன்தினம் துபாய் வழியாக தனியார் பயணிகள் விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருந்தார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைகளை முடித்துக் கொண்டு தனது உடைமைகளை எடுப்பதற்காக கன்வேயர் பகுதிக்குச் சென்றபோது ராமானுஜலு உடைமைகள் அதில் வரவில்லை.

இது குறித்து அவர் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதுகுறித்து அதிகாரி விசாரனை நடத்தியபோது அவரின் உடமைகள் விமானத்தில் ஏற்றப்படாமல் துபாயில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாளை சென்னை வந்துவிடும் அதன் பிறகு உங்களது உடைமைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து அவரை அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து நேற்று சென்னை விமான நிலை அதிகாரிகள் ராமானுஜலுவை தொடர்பு கொண்டு உங்களுடைய உடமைகள் சென்னை வந்துவிட்டது அதனை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கை வியாபாரியை கடத்தி 2 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த கும்பல்! சென்னை டு மதுரை.. தேடி பிடித்த தனிப்படை!

இதன் காரணமாக ராமானுஜலு நேற்று மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காமல் வெளிப்பகுதியில் காத்திருங்கள்; உங்களது உடைமைகளை சென்னை விமான நிலைய அலுவலர்கள் எடுத்து வந்து கொடுப்பார்கள் என கூறியுள்ளனர். இதனால் ராமானுஜலு சென்னை விமான நிலைய ஐந்தாம் எண் கேட் நுழைவு வாயில் பகுதியில் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், வெகு நேரமாக காத்திருந்த ராமானுஜலு திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் மீட்டு சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது ராமானுஜலுக்கு திடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details