தருமபுரி:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்டம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் சுகன்யா தலைமையிலான அலுவலர்கள் தருமபுரி ஒன்றியம் குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செங்கல் சூளையில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்களின் பள்ளி செல்லும் வயது குழந்தைகள் 8 பேர் இதுவரை எந்த பள்ளியிலும் சேராமல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்ற அதிகாரிகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு நான்கின் அடிப்படையில் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அவரவர் வயதுக்கு ஏற்ப வகுப்பில் நேரடியாக சேர்த்தனர்.
மான்சி குமாரி, ராசிகுமாரி, தூள் சிகுமாரி மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் முதல் வகுப்பிலும், சோனாலி குமாரி, விஜயகுமார் ஆகிய குழந்தைகள் இரண்டாம் வகுப்பிலும், நூரி குமாரி மற்றும் மம்தா குமாரி ஆகிய குழந்தைகள் மூன்றாம் வகுப்பிலும் சேர்த்தனர். பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் தமிழ்நாடு அரசின் விலை இல்லா பாட நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.