தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் 22ஆம் தேதி நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 8:37 AM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்துள்ள போலீசார், பிரபல ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இவர்கள் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கைதான 28 பேர் மற்றும் தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையைப் பரிசீலனைக்கு பின்பு, எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட வேண்டும். அந்த நடைமுறை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படிங்க: பொறுத்தது போதும்.. சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறை அதிரடி..! விறுவிறுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, சிறையில் உள்ள 27 (ஒருவர் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டிருந்தார்) பேரையும் நேரில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொலி மூலம் ஆஜர்படுத்த போலீசார் நீதிபதியிடம் அனுமதி கோரினர். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, 27 பேரும் சிறையிலிருந்தபடி காணொலி மூலம் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி வரும் வழக்கறிஞர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 22 பேருக்கும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்குகளைப் பொறுத்தமட்டில் செசன்ஸ் நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அந்த வகையில் குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கொலை வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details