மதுரை: தமிழகத்தின் 2-வது பெரிய பல்கலைக்கழகம் என்ற பெயரை பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வைப்பு நிதி காலியான நிலையில், நிதி நெருக்கடியால் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர்கள், பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கியுள்ளனர்.
இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை கூறுகையில், “அரசு திட்டமிடுகிறபோது உயர் கல்வித்துறைக்கு, பல்கலைக்கழகத்திற்கு என்ன தேவைப்படும் என்பதை அறிந்து, அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல, தமிழ்நாட்டிலுள்ள 18 பல்கலைக்கழகங்களுக்கும் நிதியை ஒதுக்கீடு செய்தால், அது பல கோடி செலவாகும். அந்த நிதியை நான்கு தவணைகளாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வந்தால், இந்த சிக்கல் இல்லாமல் மற்ற பணிகள் சிறப்பாக நடைபெறும்.
உயர்கல்விக்கென்று அரசு ஒதுக்குகிற பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி, பெரும்பாலும் ஊதியத்திற்குரியதாகவே உள்ளது. தற்போது ஒதுக்குகின்ற நிதி, ஊதியத்திற்கே அது போதுமா என்ற நிலையிலேயே உள்ளது. ஒரு சிறிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு செலவினம் ரூ.18 கோடி என்று வைத்துக் கொண்டால், இதனை அரசு நான்கு தவணைகளில் வழங்க வேண்டும்.
அதற்கு ஒப்புக்கொண்டு அதனை கொடுத்துவிட்டால் துணைவேந்தர், நிதியைப் பற்றிய கவலையின்றி ஆய்வுகளுக்கான கல்விப் பணிகளைச் செய்து கொண்டிருப்பார். ஆசிரியர்களுக்கான ஆய்வுத் திட்டங்களை வகுத்தளித்துக் கொடுப்பார். இதன் மூலம் உலக அரங்கில் நமது நாட்டினுடைய அறிவாண்மையை, வளர்ச்சியை பறைசாற்ற முடியும். ஆனால், எனக்கு தெரிந்து ஒரு பல்கலைக்கழகத்திற்கு தொகுப்பு நல்கையாக ரூ.5 கோடி அளவுக்கு கொடுக்கப்படுகிறது.
பிறகு செலவுகள் செய்த பிறகு இறுதி கருத்துரு அனுப்பும்போது, அதன் மீது பல்வேறு தடைகள் எழுப்பப்பட்டு, அதனால் நிதி குறைக்கப்படுவதும் உண்டு. ஆடிட் அப்ஜெக்ஸன் என்று சொல்லக்கூடிய ஒரு தணிக்கை தடை ஏற்படும்படி செய்வது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது. உள்ளாட்சி நிதித் தணிக்கையின் சார்பில், பல்கலைக்கழங்களில் நிதி அலுவலர் என்று ஒருவர் இருக்கிறபோது, அவர் இந்த செலவுகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று பரிந்துரை செய்த பிறகுதான் துணைவேந்தர் கோப்புகளில் கையெழுத்திடுவார்.
அப்படியிருக்க, எங்கிருந்து தணிக்கை தடை என்ற ஒன்று வருகிறது? அப்படியானால் நிதி அலுவலர், பதிவாளர் என்றெல்லாம் ஒரு கோப்பு சுற்றி வருவதற்கு என்ன பொருள் இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிய தேவையுள்ளது. தணிக்கை தடை ஏற்படுவதற்கு முன்னரே, இது போன்ற சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தின் சாராம்சம்” என்றார்.