திருப்பத்தூர்: குனிச்சு மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவரின் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சு மோட்டூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இசை குறித்து பாடம் எடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, மாணவர் ஒருவரின் புத்தகத்தில், அந்த மாணவரின் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதியுள்ளார்.
இது குறித்து மாணவர் தனது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், கடந்த நவ.19 ஆம் தேதி பெற்றோர்கள் ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். இதற்கு ஆசிரியர் முறையான பதில் அளிக்காமல், உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள் என்று முறையற்ற பதிலை கொடுத்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இசைக்கருவியை வாசிப்பவர்கள் மோசமாக சாதியை சேர்ந்தவர்கள் எனவும் ஆசிரியர் கூறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று - செவ்வாய்க்கிழமை (நவ.26), மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை குறிப்பிட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணி நீக்கம் செய்யம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.