சென்னை:2024- 2025ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பள்ளிக்கால அட்டவணை பள்ளி நாட்காட்டி:2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் பள்ளி தொடங்கும் நாள். தேர்வுகள் நடைபெறும் நாள், ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி.
தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, மன்றச் செயல்பாட்டிற்கான பயிற்சி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி, தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி, பருவத் தேர்வு அட்டவணை போன்ற தரவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளும் முறையான பணிப் பகிர்வுடன் கூடிய வகுப்பிற்குரிய மற்றும் ஆசிரியர்களுக்குரிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பள்ளி திறக்கும் நாள் முதல் செயல்படுத்தப்பட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாட வேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாட வேளைகளில் விளையாட வைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் ஆறு முதல் 8ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.