எடப்பாடி: சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ''இந்திய விமானப்படையின் 92வது தூக்க நாள் விழாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண வருமாறு மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி, லட்சக்கணக்கான மக்கள் கூடினர். ஆனால் அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தாலும், லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடியதாலும் கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்தனர்.
மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வாயிலாக தெரிகிறது. எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. இது வெட்கக்கேடான விஷயம்.'' என்றார்.
மேலும், '' திமுக அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார். முதலமைச்சர், அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர். அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் அழைப்பு விடுத்தார். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த பிரச்சனைக்கு தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்'' என கூறினார்.