சென்னை:இன்று நடைபெற்றதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என வலியுறுத்திய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேரவை தலைவர் ''முதலமைச்சரின் தனித்தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'' எனக் கூற, உறுப்பினர்கள் வாய்மொழியாக அதனை ஏற்றனர். பின்னர், நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான். அது நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம்.