சென்னை: பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ''இணைகிறது இரு இதயம் - மலர்கிறது புது உதயம்'' என்ற தலைப்பில் 21 தம்பதிக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமண விழா நடந்தது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
உதிக்கும் உதயம்
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 'உதிக்கும் உதயம்' என்ற பாடலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட திமுக இளைஞர் அணி துணைசெயலாளர் எஸ்.ஜோயல் பெற்று கொண்டார். முன்னதாக விழா மேடையில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, '' திமுக இயக்கமென்பது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழர்களுடைய வாழ்வு மலர்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இதில், ஐந்தாவது தலைமுறையாக உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அப்படி உழைக்கும் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு.
இதையும் படிங்க:அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
உதயநிதி ஸ்டாலினை சிறு வயதில் இருந்து பார்க்கிறேன், பெரியாருக்கு இருக்கும் பகுத்தறிவு, சுய மரியாதை போன்றவைகளை நான் உதயநிதியிடம் காண்கிறேன். அண்ணாவிடம் இருக்கும் இரு மொழிக் கொள்கையை ஏற்று, இன்று தாய் மொழி தமிழிலும் மற்றும் ஆங்கிலத்தில் சரமாரியாக பேசக்கூடிய ஆற்றல் துணை முதல்வருக்கு மட்டுமே உண்டு'' என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, '' எவ்வளவு பெருமழை வெள்ளத்தையும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது'' என்றார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி திமுக அரசு கண்டு கொள்வதில்லை என அதிமுக சார்பில் எழுப்பட்ட குற்றசாட்டுக்கு பதில் அளித்த சேகர்பாபு, '' மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை, அதனால்தான் அறிக்கை வெளியிடுகிறார்'' என விமர்சனம் செய்தார்.
நேற்று, சென்னை விமான நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ''முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை'' என கூறியதற்கு, பதில் அளித்த சேகர்பாபு, முதல்வர் தன் இளம் பருவத்தில் மிசாவை சந்தித்தவர். 60 ஆண்டு காலமாக பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துகொண்டு, அரசியலில் அவர் கால்படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்களுடைய துயர் துடைப்பதற்க்கு இரவு பகலாக பாடுபட்டு கொண்டிருப்பவர் தமிழக முதல்வர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை'' என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்