தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவை கருணாநிதியாலே ஒன்னும் செய்ய முடியல" - எடப்பாடி பழனிசாமி தாக்கு! - EDAPPADI K PALANISWAMI

அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதை போல் உதயநிதி வந்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 8:51 AM IST

திருநெல்வேலி: அதிமுகவின் 53வது தொடக்க விழா பொதுக்கூட்டம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியில், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக சரித்திரம் கிடையாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது, பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. பல இன்னல்களுக்கு மத்தியில் தான் அதிமுக தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போதும் சரி பல போராட்டங்களை அதிமுக சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது.

திமுக என்ன மன்னர் பரம்பரையா?:ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் திமுகவிற்கு ஆதரவாக சிலர் எதிர்த்து வாக்களித்தனர். சில எட்டப்பர்கள் இருந்தது அப்போதுதான் கண்கூடாகத் தெரிந்தது. அப்படிப்பட்ட எட்டப்பர்களுக்கு கட்சியில் உயரிய பதவி வழங்கினோம். பல லட்சம் பேர் இரவு பகல் பாராது உழைத்து அதிமுக ஆட்சி அமைத்ததை கலைப்பதற்கு சிலர் துணை போனார்கள். அதிமுக எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திமுக நாடகம் போடுகிறது.

திமுகவின் குடும்பத்தில் தமிழக அரசு சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை, ஸ்டாலினாலும் முடியவில்லை. தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதைப் போல் உதயநிதி வந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் பரம்பரையா?

இதையும் படிங்க: திராவிட நாடா, தமிழ்நாடா?.. அன்பில் மகேஷ் விவாதம் செய்ய தயாரா? - சீமான் சவால்!

திமுக வாக்குவங்கி குறைவு:அடிப்படை உறுப்பினர் பெரும் பதவிக்கு வருவது அதிமுகவில் மட்டும்தான், அதற்கு நானே சாட்சி. திமுகவில் உள்ள அமைச்சர்களின் குடும்பமும், கருணாநிதி குடும்பத்தை போன்ற அவர்களது குடும்பத்தினருக்கே பதவிகளை வழங்கி வருகின்றனர். ஜனநாயக முறைப்படி செயல்படும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. ஜாதி மதம் இல்லாத கட்சியாக அதிமுக திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியில் வெறும் பணக்காரர்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அங்கு சாதாரண நபர்களுக்கு பதவிகள் கிடைக்காது.

அதிமுகவின் சக்தியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி பலம் பணபலம் கூட்டணி பலம் என அனைத்தையும் வைத்து 26.52% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் கூட, 2019 விட 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றது. ஆனால், திமுக தற்போது 7% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. திமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டது, அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

மகனுக்கு பதவி: ஆட்சிக்கு வந்த பின் திமுக எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை. ஆட்சிக்கு வந்து மூன்றை ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மக்கள் தலையில் திமுக அதிக கடனை சுமத்துகிறது. அடிப்படை பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததைத் தவிர ஸ்டாலின் எதையும் செய்யவில்லை.

பாதுகாப்பு இல்லாத ஆட்சி: திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. மக்கள் பிரச்சனைகளுக்கு இவ்வளவு நாள் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் வாய் திறக்காமலிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மக்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு போவதை அறிந்து, பேசத் தொடங்கிவிட்டது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா எளிதில் கிடைக்கிறது. கஞ்சா அருந்தும் விஷமிகளால் பெண்கள் வன்கொடுமை அதிகம் நடக்கிறது.

திமுக மோசமான நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்லிக் கொண்டே இருக்கிறார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள்? ஆனால், காவேரி பிரச்சனையில் அதிமுக எம்பிக்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கி ஒரு பெரும் முடிவைப் பெற்றனர்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, மதுரையில் நாதக நிர்வாகி கொலை, சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை போன்ற எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுகவின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. ஆட்சியில் எதுவும் முறையாக செய்யப்படவில்லை, உதயநிதி ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details