சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி வடக்கு, தெற்கு ஒன்றியம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வனவாசியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சேலம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே உயர் பதவிக்கு வர முடியும்.
கனவு காண்கிறார் ஸ்டாலின்:ஸ்டாலினுக்குப் பின் நான் தான் முதலமைச்சர் என யாரும் சொல்ல முடியுமா?, சொன்னால் அந்த கட்சியில் விட்டு வைப்பார்களா?, குடும்பக் கட்சி, வாரிசு அரசியல், மன்னர் பரம்பரை, ஆண் வாரிசுகள் மட்டுமே பதவியில் இருப்பார்கள். நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், “நான் கனவு காண்கிறேன் என பேசி உள்ளார். அதிமுக சரிந்து விட்டது என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.
திமுகவுக்கு சரிவு:அது பலிக்காது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெறும் முப்பதாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்படி என்றால் திமுகவுக்கு தான் சரிவு, அதிமுகவுக்கு செல்வாக்கு. மேலும் நாமக்கல் விழாவில் முதலமைச்சர், நாமக்கல்லுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்றார். அவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
அதிமுக ஆட்சியில் தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி, பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சட்டக் கல்லூரி, நகராட்சிக் கட்டடம் கட்டப்பட்டு நானே திறந்து வைத்தேன். ஒவ்வொரு முறையும் தேசிய கட்சிகளை ஆதரித்து, அவர்கள் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளை தேசியக் கட்சி பொருட்படுத்துவதில்லை.
இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள்! நாளை மா.சு. எடுக்கும் முடிவு என்ன?
திமுக கூட்டணியில் புகைச்சல்:அதனால் தனித்து நின்றோம். திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதாக ஒரு தோற்றத்தை ஊடகம் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் ஸ்டாலின். திமுக வலிமையான கூட்டணி என ஒரு அமைச்சர் சொல்கிறார். திமுக கூட்டணியில் திமுகவை விமர்சித்து முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசி வருகின்றனர்.
கூட்டணி அதிமுகவை தேடி வரும்:அதனால் திமுக கூட்டணி கலகலத்து வருகிறது. அதுவே சந்தோஷமாக இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தில் போராட்டம் நடக்கிறது. அதை கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால் சொத்து வரி உயர்த்திய போது, அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும். அதிமுக என்ற மலர் பூத்துக் குலுங்குகிறது. அதில் தேன் என்ற மக்கள் செல்வாக்கு நிரம்பியுள்ளது. இதை தேடி கூட்டணி என்ற தேனீக்கள் வரும்.
அரசு வருவாய் அதிகரிப்பு: அதிமுக ஆட்சி முடியும் போது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. திமுக ஆட்சியில் கடும் வரி உயர்வால் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரித்து உள்ளது. சாலை வரி, கலால் வரி என 9 ஆயிரம் கோடி ரூபாய், பெட்ரோல், டீசல் வரி என தமிழகத்துக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் உள்ளது. ஆனால் முன்னதாக திமுக ஆட்சி அமைந்த உடன் மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினர்.
திமுகவின் ஊழல் வெளிச்சத்திற்கு வரும்: திமுக ஆட்சியில் அறநிலையத்துறையை கூட விட்டு வைக்கவில்லை. அதையும் காலி செய்து விட்டனர். அந்த சாமி தான் 2026-ல் கேட்கப்போகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மூன்று சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைத்தது. ஒரு அமைச்சர் 411 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த பின் பல அமைச்சர்களின் ஊழல் வெளிச்சத்திற்கு வரும்.
ஊழலால் கலைக்கப்பட்ட கட்சி திமுக: திமுக ஆட்சியில் புது தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 230 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, 410 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அப்போது யார் ஊழல்வாதி என்று தெரியும். நான் சிறுவயது முதல் பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்று உள்ளேன். ஸ்டாலினை போல் பயந்தவர் அல்ல. வழக்குகளை வாபஸ் பெற்றவன் அல்ல. ஊழலால் கலைக்கப்பட்ட கட்சி திமுக ஆட்சி தான்” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கேகிளிக்செய்யவும்