தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது சேலம்:சேலம் மாவட்ட அதிமுக சார்பில், மல்லமூப்பன்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த மல்லமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாந்தி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் 700 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து, அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலம் தமிழ்நாட்டின் பொற்காலம், மக்களுக்கு பல்வேறு நன்மைகளை கொண்டு வந்த ஆட்சி அதிமுக ஆட்சி தான்.
இந்தியாவிலேயே உயர்கல்வி கற்பதில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கு அதிமுகவின் 30 ஆண்டுக்கால சிறப்பான ஆட்சிதான் காரணம். இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியில் திமுக அரசு மக்களுக்குச் செய்த நன்மை என்ன? திமுக குடும்ப கட்சி, கார்பரேட் கம்பெனி, லாபம் நஷ்டம் மட்டுமே பார்க்கும் கட்சியாக உள்ளது.
திமுக இளைஞரணி மாநாட்டில் குடும்ப வாரிசாக இன்பநிதியையும் உட்கார வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியைக் கொண்டு வருகின்றனர். ஜனநாயக நாட்டில் திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. இது மக்களுக்கான ஆட்சி இல்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு எனச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா மட்டும் தாராளமாகக் கிடைக்கிறது. இதற்கு அரசு பதில் செல்லியாக வேண்டும். அதிமுக ஆட்சியின் போது புயல், வறட்சி, கரோனா பாதிப்பு ஏற்பட்ட காலம் என எப்போதும் விலைவாசி உயராமல் மக்களைப் பாதுகாத்தோம். ஆனால் தற்போது திமுக, ஆட்சி பொறுப்பேற்றதும் 40 சதவிகிதம் வரை விலைவாசி உயர்ந்துள்ளது.
வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விவசாயம் படு பாதாளத்திற்குச் சென்றது என இந்த ஆட்சியில் மக்கள் பிழைக்க முடியாத நிலையில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் கூட இந்த அரசு மூடிக் கொண்டிருக்கிறது" என சாடினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்கக் கூடாது என்கிறோம்: அமைச்சர் கீதா ஜீவன்