தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை”.. சேலம் அதிமுக நிர்வாகி கொலை குறித்து ஈபிஎஸ் தாக்கு! - edappadi palaniswami condemn - EDAPPADI PALANISWAMI CONDEMN

Edappadi Palaniswami condemn: சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:55 PM IST

சேலம்:சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதிச் செயலாளர் சண்முகம், நேற்று நள்ளிரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அதிமுக நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அதிமுக அலுவலகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது கண்டனத்திற்குரியது. திட்டமிடப்பட்டு இந்த படுகொலை செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. அதன் அடிப்படையில், தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகத்தை கொலை செய்தவர்கள் அதே பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டவிரோத செயல்கள் குறித்து சண்முகம் போலீசில் புகார் செய்ததால், அவரை சமூக விரோதிகள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது. சண்முகத்தை இழந்து வாடும் உறவினர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை முதல் 1,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு முன்பாக திரண்டு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டு காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:அதிமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. இரவு நேரத்தில் பயங்கர சம்பவம்.. சேலத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details