திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 8 நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.அருணாச்சலத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திருப்பூர் என்று சொன்னாலே பின்னலாடை தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் மோசமான நிலைக்குச் சென்று விட்டது. பல லட்சம் பேர் பணிபுரியும் இந்த தொழில் சீரழிந்து விட்டது. தொடர் போராட்டம் நடத்தியும் விடியா திமுக அரசு மின் கட்டணத்தைக் குறைக்கவில்லை. ஜெயலலிதா அரசு இந்த தொழிலுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, தமிழ்நாட்டை தொழில் நிறைந்த மாநிலமாக உருவாக்கியது அதிமுக, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து தொழில் சரிவிலிருந்து மீட்பார்கள்.
ஜிஎஸ்டியால் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னரே, கடுமையான மின் கட்டண உயர்வு. விடியா திமுக அரசு கவனம் செலுத்தாத காரணத்தால், நூல் விலையும் உயர்ந்துவிட்டது. டாலர் சிட்டி டல் சிட்டியாகி விட்டது. பனியன் தொழில் நசிவடைந்துள்ளது. எப்போது எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டு வரும்.
பனியன் நூற்பாலைகள் நசிந்து விட்டது. பனியன் தொழில் முடிந்துவிட்டது. மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. அரிசி, பருப்பு விலை உயர்ந்து விட்டது. தொழிலும் இல்லை, வருமானமும் இல்லை. ஆனாலும், ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை. ஓட்டை சட்டியாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று தனது குடும்பம் வாழ்ந்தால் போதும் என ஆட்சி நடத்துகிறார்.
ஸ்டாலினும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து, அந்த பணத்தைப் பதுக்கி விட்டார்கள் என்று நிதி அமைச்சரே சொல்லியுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்வதாக ஸ்டாலின் சொன்னார். அது முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளிநாட்டுக்கு தமிழ்நாட்டு தொழில் அதிபர்களை வரவைத்து ஒப்பந்தம் போடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டது அதிமுக. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களால் சீரழிகிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக கட்சி நிர்வாகிகள் தான் போதைப்பொருளை சப்ளை செய்கிறார்கள் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்குகிறார்கள். இதன்மூலம் வருஷத்துக்கு ரூ.3,600 கோடி கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது. அதிமுகவில் இருந்ததால் ஊழல்வாதி, திமுகவிற்குச் சென்றால் புண்ணியவாதி? செந்தில் பாலாஜி இதுவரை 5 கட்சிக்கு போய் வந்தவர்.
ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், மனு வாங்குவதற்கு ஒரு பெட்டி வைத்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் அப்பெட்டியே காணாமல் போய் விட்டது. மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் என்று ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். திமுக ஆட்சி மாறத்தான் போகிறது. இந்த தேர்தல் பத்திர ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் விட மாட்டோம்.
ஒரே திட்டத்தை அறிவித்து குழு போடுவதுதான் இவர் வேலை. எல்லாவற்றுக்கும் குழு அமைத்து விடுகிறார்கள். ஆனால், ஸ்டாலின் போட்ட எந்த குழுவும் எதுவும் செய்யவில்லை. 52 குழுவும் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. எந்த திட்டமும் நிறைவேறவில்லை. ஸ்டாலின் திறமையற்ற முதல்வர். பொம்மை முதல்வர். விலைவாசி உயர்ந்துவிட்டது, வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி விட்டு நலமா என்று கேட்கிறார். உங்கள் குடும்பம் நலமா இருக்கிறது. ஆனால், மக்கள் நலமாக இல்லை” என்றார்.
இதையும் படிங்க: "பெண்களை இழிவு செய்யவதையே கொள்கையாகக் கொண்டது பாஜக" - பிரதமரின் ‘பெண் சக்தி’ பேச்சை விமர்சித்த கனிமொழி! - Lok Sabha Election 2024