சென்னை:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (ஜூன் 4) வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் 40 என்ற வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கை போராளிகளுக்கு சமமே. வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இந்த தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சியையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாக புரிந்துகொண்ட தொண்டர்களின் அன்புக் கட்டளைகளுக்கு ஏற்ப, கொள்கைக்காக வாழ்வோம். எது வந்தாலும் ஏற்போம் என்று இந்தத் தேர்தலில் களம் இறங்கியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:'மற்றவை' இல்ல 'மூணாவது'... அதிமுகவை பின்தள்ளிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்!