சேலம்:சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் அதிமுக ஒன்றிய பேரூர் செயல்வீரர் பொதுக்கூட்டம் நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் திமுக 36 ஆயிரம் போராட்டங்களை நடத்தியது, அவை அனைத்துக்கும் அதிமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக அரசு எந்த போராட்டத்துக்கும் அனுமதி வழங்குவது இல்லை.
எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வலிமையான கூட்டணியை அமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க ஆசை இருக்கலாம், ஆனால் அதை மக்கள் தான் முடிவெடுப்பார்கள்.
இதையும் படிங்க: செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அவருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரும் பொது சேவை செய்யவேண்டுமென்று விரும்பி, கட்சி தொடங்கியுள்ளார். தற்போது நடைபெறவுள்ள தவெக மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல, அதிமுக போராட்டங்களுக்கும் திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றாததால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். திமுகவில் நிறைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திமுகவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணிக் கட்சித் தலைவர் கையை விட்டால், கடைசியில் இருக்கிற திமுகவின் கதி என்னாவது? அப்படித்தான் இன்றைக்கு திமுகவின் நிலை உள்ளது.
கூட்டணி கட்சியினர் கைவிட்டால் திமுக வீழ்ந்து போய் விடும். ஆனால், அதிமுக அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றியும் கிடையாது, நிரந்தரத் தோல்வியும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்