வேலூர்:காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 3 இடங்களில் நேற்று முதல் 16 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நீடித்த நிலையில், தற்போது நிறைவு பெற்றுள்ள அமைச்சர் வீட்டில் எந்த ஒரு ஆவணம் கைப்பற்றவில்லை பணமும் கைப்பற்றவில்லை எனவும், கிங்ஸ்டன் கல்லூரியில் கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளதால் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது. அதே வீட்டில் தான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தனும் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3) காலை 8.55 மணியளவில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்.
அமலாக்கத்துறை அதிரடி சோதனை:
ஆனால், வீட்டில் அமைச்சரும், கதிர் ஆனந்த் என யாரும் இல்லாத நிலையில், பணியாட்கள் மட்டும் இருந்தால் ஆள் இல்லாத வீட்டில் எப்படி சோதனை நடத்துவது எனக் கூறி வீட்டின் வெளியே நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, எம்.பி கதிர் ஆனந்தை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகன் வீடு (ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து, அவரிடம் ஒப்புதல் கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக பெற்று, கதிர் ஆனந்த் எம்.பி, அறிவுறுத்தலின்படி துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, வக்கீல் பாலாஜி ஆகியோரிடம் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.
அதையடுத்து காலையிலிருந்து காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்குப் பிறகு மதியம் 2.30 மணியளவில் சோதனையைத் துவக்கினர். அந்த வகையில், அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடந்து வந்தது. பின்னர், மாலை 6 மணியளவில் கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுத்திய உள்ளிட்ட ஆயுதங்களுடன் துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற நபர் (ETV Bharat Tamil Nadu) பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணம்:
மேலும், சோதனை குறித்து தகவலறிந்து வந்த திமுக நிர்வாகி துரைமுருகன் வீட்டின் முன்பு கூடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சோதனையின் போது, வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி, காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனிலும் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சோதனையில் முக்கிய ஆவணங்களை சூட்கேஸில் எடுத்துச் செல்லும் காட்சி (ETV Bharat Tamil Nadu) சுமார் 9 மணி நேரம் வீட்டில் நடந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியானது. அதேபோல், சிமெண்ட் குடோனில் சிமார் 11 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை நிறைவில் ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
துரைமுருகன் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை:
இதற்கிடையே, எம்.பி கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கேயும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், துரைமுருகன் வீட்டில் எந்த ஒரு ஆவணம் கைப்பற்றவில்லை பணமும் கைப்பற்றவில்லை.
ஏற்கனவே, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாகக் கூறி பூஞ்சோலை சீனிவாசன் உறவினர் வீட்டிலிருந்து ரூ.11.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின் போது கூடியிருந்த போலீசார் மற்றும் கட்சி தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu) பின்னர், இதுகுறித்து காட்பாடி போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த இந்த அமலாக்கத்துறை சோதனை ஆளுங்கட்சி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்குள் கடப்பாரையுடன் நுழைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்.. வேலூரில் பரபரப்பு!
2019- சோதனையின் தொடர்ச்சியா?
காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான 105 ஏக்கர் நிலத்தினை போலிப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரத்துக்கும் 2019 தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட 11.55 கோடி பணத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடிய விடிய தொடர்ந்த சோதனை (ETV Bharat Tamil Nadu) ஆனால், நடந்த சோதனை அதன் தொடர்ச்சியாக நடந்த அமலாக்கத்துறை சோதனையா அல்லது இது புதிய சோதனையா என்பது யாருக்கும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி சோதனையால் வேலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
விடிய விடிய சோதனை:
காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனையானது விடிய விடிய நடைபெற்று வருகிறது. கல்லூரிக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காகப் போடப்பட்டுள்ளனர். வளாகத்திற்குள்ளே செல்கின்ற பணியாளர்களைக் கூட சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை செய்து அனுப்பப்படும் காட்சி (ETV Bharat Tamil Nadu) மேலும், கேண்டினுக்காக கொண்டு செல்லப்படுகின்ற உணவுப்பொருள் மற்றும் பால் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை சோதனையை நிறைவில் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.