சென்னை: சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் (FEMA) செய்த விவகாரத்தில், தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ‘ஓபிஜி குழுமம்’ (OPG Group) தொடர்பான இடங்களில் 2 நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.38 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ராஸ்டிரக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் பி.விண்ட் எனர்ஜ (BEE Wind Power) பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு நிறுவனமும் சூரிய மின்சாரத்திற்கு தேவையான சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த நிறுவனங்களின் மீது புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 15 இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதில், சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தை சார்ந்தவர் வீடு, தேனாம்பேட்டை கே.பி. தாஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.