சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்கக்கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர்த்து, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும், போதுமான எந்த காரணமும் இல்லாததால் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது.