சென்னை:கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனமான 'அருணாச்சலா இன்பேக்ட்ஸ்' நிறுவனம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சட்ட விரோதப் பரிமாற்றம் நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச்.09) காலை அருணாச்சலா இன்பேக்ட்ஸ் உரிமையாளர் செல்வராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், சென்னையில் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம்,தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை,எழும்பூர்,வேப்பேரி உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் செல்வராஜ் நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரு நாள் முழுவதும் அரசு ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் நிறைவு பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.