மதுரை:திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி லட்சம் பெற்ற வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரல் கைது செய்யப்பட்டவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி. தற்போது, மதுரை மத்தியச் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவைத் திண்டுக்கல் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அங்கித் திவாரி ஜாமின் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் அங்கித் திவாரியின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமலாக்கத்துறை மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சீராய்வு மனுவாக விசாரணைக்கு உகந்ததா என நீதிபதிகள் ஜெயசந்திரன், குமரப்பன் அமர்வில் முன்பு பட்டியலிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அங்கித் திவாரி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் விசாரணை உத்தரவைப் பொறுத்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்” என தெரிவித்தனர்.
இதனையடுத்து அமலாக்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அமலாக்கத் துறை சார்பில் அங்கித் திவாரியை விசாரிக்க வேண்டியதுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று, அங்கித் திவாரின் வாக்கு மூலத்தை வீடியோவில் பதிவு செய்ய அனுமதி கேட்டு உள்ளோம்" என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அங்கித் திவாரி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்".
இதையும் படிங்க:மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு - சட்டமன்ற செயலகம் அறிவிப்பு!