சென்னை:விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில் ஜூலை 23ம் தேதி வரை 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் 28 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்துள்ளனர்.