திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவ்வாறு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மேயர்கள் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த சரவணன் பமேயராக பதவி வகித்தார். அதேநேரம் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட கடும் உட்கட்சி பூசல் காரணமாக மேயர் சரவணனை சொந்தக் கட்சி கவுன்சிலர்களே கடுமையாக எதிர்த்து வந்தனர். குறிப்பாக, மன்றக் கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
அப்போது, மேயரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, தற்போது துணை மேயராக இருக்கக்கூடிய ராஜு பொறுப்பு மேயராக பதவி வகித்து வருகிறார்.
எனவே, அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம், மேயர் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பிறகு தான் மேயரை தேர்ந்தெடுக்க முடியும். இது போன்ற நிலையில் தான், இன்று நெல்லை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடத்தும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நகர மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்திட மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.