கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக கிளை அலுவலகத்தில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு, பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், "கோயம்புத்தூர் குறித்து பிரதமர் பழமையோடு நவீனத்துவமும் சேர்ந்த பகுதி என குறிப்பிடுகிறார். இந்திய கலாச்சாரத்திலும், இந்துக்கள் கலாச்சாரத்திலும் சனாதன தர்மத்திலும் தமிழ்நாட்டிற்கு பழம்பெருமைமிக்க பாரம்பரியம் உள்ளது.
இங்குள்ள மருதமலை கோயில் 1,200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாகும். அந்த வகையில், தமிழ்நாடு கலாச்சாரமும், பாரம்பரியமும் சனாதன தர்மத்தோடு இணைந்ததாகும். இதை அறியாமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் சனாதன தர்மத்தை கொடூர நோய்களோடு ஒப்பிட்டு அழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களின் கருத்தை நிராகரித்து விட்டனர்.
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் கோயில் உருவாக வேண்டும் என 500 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர். பெத்லகேம் கிறித்தவர்களுக்கு புனித நகரம் என்பது போல, மெக்கா இஸ்லாமியர்களுக்கு புனித நகரம் என்பது போல, இந்துக்களுக்கு அயோத்தி புனித நகரமாக விளங்குகிறது.
நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் மதத்தினை கடைபிடிக்க அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில், இந்து மதத்தை பின்பற்றுபவர்களும், ராமரை வழிபடுபவர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடலாம். தமிழ்நாடு அரசு இந்தியாவில் இல்லாததாக நினைத்து, அரசியலமைப்பில் இல்லாத அவர்களது கருத்துக்களையும், விதிமுறைகளையும் வலியுறுத்துகின்றனர்.
ராமர் பிரதிஷ்டை நிகழ்வைக் காண மொரிசியஸ் நாடு அவர்களது மக்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளது. ராமர் பிரதிஷ்டை அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. வரும் நாட்களில் மாநில அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளிவரலாம். தமிழ்நாடு அரசும், தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு பாதிப்பு இல்லை என்றால், முன்பே ராமர் கோயில் திறக்கப்பட்டிருக்கும்.