திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அந்த காலகட்டத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும் பிடிஓ ( வட்டார வளர்ச்சி அலிவலர்) அதிகாரி சிறப்பு அலுவலராக செயல்பட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட மண்டல துணை வளர்ச்சி அலுவலர்கள் நிதிச் செயல்பாடுகளில் இரண்டாவது கையொப்பமிடும் அதிகாரியாக இருந்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 27 ஊராட்சிகள் உள்ளன.
அவற்றில் கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியில் 2021ல் பிடிஒவாக இருந்த லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், துணை பிடிஒ சங்கரன், கஸ்தூரிரங்கபுரம் பஞ்சாயத்து முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கஸ்தூரிரங்கபுரம் பஞ்சாயத்தில் செய்யாத வேலைக்கு பில் போட்டு அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
விசாரணையில், ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரரான கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கு கிராம பஞ்சாயத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பணிகளுக்கான டெண்டர் கொடுக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பணி துவங்கப்படாமல் அந்த பணம் கிராம பஞ்சாயத்தால் திரும்பப் பெறப்பட்டதில் ரூ.17 லட்சத்து 15 ஆயிரத்து 288-ஐ முறைகேடு செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக 2021ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், சங்கரன், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 3 பேர் மீது ஊழல் ஒழிப்புச் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்து எரிப்பு.. போலீசார் விசாரணை! - Cuddalore family murder