சென்னை: தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளது.
ஆனால், அந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆ.வைத்திலிங்கத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கிய புகார் மனுவில், "ஸ்ரீராம் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்காக ஆ.வைத்திலிங்கத்திற்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கியுள்ளது. லஞ்ச பணம் பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் ஆ.வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல காட்டப்பட்டுள்ளது.
ஆனால், முத்தம்மாள் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதாக கூறப்படும் பாரத் நிறுவனம், தாங்கள் வாங்கிய ரூ.280 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாமல், தங்களுடைய சொத்துக்களை விற்று அடைப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.