சென்னை:கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யா. தொகுதி மேம்பாட்டு நிதியை மோசடி செய்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.35 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2018-2019 ஆண்டில் தொகுதியில் கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மோசடி செய்திருந்தது, முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மேற்கு மாம்பலம் காசிகுளம் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் பன்னோக்கு கட்டிடங்கள் கட்டப் போவதாகக் கூறி, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பொய்யான ஆவணத்தை தயார் செய்து, ரூ.14 லட்சம் வரை மேம்பாட்டு நிதியிலிருந்து எடுத்து மோசடி செய்துள்ளார்.
அதேபோல், கோடம்பாக்கம் பிருந்தாவன் தெரு பகுதியில் கட்டிடம் கட்டப் போவதாக ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, பிருந்தாவன் தெரு பகுதியிலேயே ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ.8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியதும், ஈஸ்வரன் கோயில் தெருவில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ.6 லட்சm ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.