திருச்சி:நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 78 சதவிகிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிவிட்டார். கரோனா போன்ற இக்கட்டான சூழலில் நிதி நெருக்கடி இருந்த போதிலும், பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி உள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது சாத்தியம் அற்றது எனத் தீர்க்கமாக வாதங்கள் எழுந்தன. எவ்வாறு இதனை செயல்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 1.7 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மகளிர் உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் தமிழகம் பெரும் இழைப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு 1 பைசா கூட தமிழகத்திற்கு அளிக்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், எதையும் செயல்படுத்தவில்லை. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டாலும், முழுமையான பணிகள் நிறைவு பெற்றும் விமானங்கள் தரையிறங்குவதோ அல்லது செல்வதோ இல்லை.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி (INDIA Alliance) அமைந்தால், சிஏஏ (CAA) சட்டத்தை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியே இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்:எங்களைப் பொருத்தவரை, ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியின் பிரதமர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உறுதியாக செயல்படுத்துவேன். எதை என்னால் நிறைவேற்ற முடியுமோ, அதை மட்டுமே நான் வாக்குறுதியாக அளிப்பேன்" எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி விவகாரத்தில், ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, "மாநில உரிமைகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு அதற்கு ஆளுநர் ஒத்துப்போக வேண்டும் என்று தான் கூறுகிறது.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு ஏதோ வானளாவிய பதவி கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு இருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலி என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“நாளை மலைக்கோட்டை மாநகரில் பரப்புரையைத் தொடங்குகிறேன்” - திருச்சி திமுக பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்! - MK Stalin In Trichy