தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை! குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை! - chennai news

Kilambakkam Duplicate Tickets: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kilambakkam Duplicate Tickets
Kilambakkam Duplicate Tickets

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 10:01 PM IST

Updated : Jan 29, 2024, 10:36 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடந்த 24.01.2024 அன்று முதல் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து முனையத்தில் 77 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு, நடைமேடை எண் 10,11,12,13 மற்றும் 14 ஆகிய நடைமேடைகளை ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர 250 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இந்த முனையத்திலேயே இயக்கப்படாத பேருந்து நிறுத்துமிடம் (Idle Parking Bay) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்குப் புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளன. அதனைத் தொடர்ந்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று (ஜன. 27) மாலை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய முதன்மை நிர்வாக அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அனுமதியற்ற முறையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து போலி டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று (ஜன. 27) இரவு, முதன்மை நிர்வாக அலுவலர் டிஆர்ஓ தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், "ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்யேக டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் (Online Booking & Ticket Booking Counter) மூலமாகவோ மட்டுமே, டிக்கெட்டு முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புத்தகங்கள் வைத்து பேருந்து நிலையங்களில் சட்டவிரோதமாக முன்பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அத்தகைய இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்குச் சட்டவிரோதமாகக் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த எச்சரிக்கை தொடர்பாக பயணிகளுக்கு தற்போது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆட்சியர் உத்தரவிட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை? - 15 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்!

Last Updated : Jan 29, 2024, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details